பத்மநாப ஐயர் ஒரு நடமாடும் நூலகம்!
இளந்திரையன்
அந்த அறை - அப்படித்தான் இருந்தது!
ஊரின் குச்சு ஒழுங்கைகளைப் போல் அந்த அறையின் வாசலில் இருந்து படுக்கைக்கும், கணினி மேசைக்கும் போவதற்குமான ஒரு ஒற்றையடிப் பாதை.
அவ்வழியால் இருவர் கூட பக்கம், பக்கமாக நடந்து போக முடியாது. அந்த அறையின் ஏனைய இடப்பரப்பு எல்லாம் புத்தகங்களால் நிரப்பப்பட்டிருந்தது. அந்த அறையைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த சுவரின் அரைப்பகுதி ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களால் மறைக்கப்பட்டிருந்தது. இது தான் பத்மநாப ஐயரின் அறை.
ஈழத்து இலக்கிய உலகில் மட்டுமல்ல, தமிழக இலக்கிய உலகிலும் நன்கு அறியப்பட்ட ஐயா என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகின்ற பத்மநாப ஐயர் பன்முகப் பார்வை கொண்ட நவீன படைப்பிலக்கிய முயற்சிகளின் உந்து சக்தியாக விளங்கி வருகின்றார்.
தனது வாழ்வில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இலக்கியத் துறையிலும், வெளியீட்டுத் துறையிலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்துக் கொண்டவர்.
இத்தகையதொரு அற்புதமான மனிதர் இலண்டன் Tooting முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 10.04.10 அன்று நடைபெற்ற முத்தமிழ் விழாவில் கௌரவிக்கப்பட்டதை இட்டு மகிழ்ச்சி கொள்கிறேன்
1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி பிறந்த இவர் இலக்கியம் மீதான தனது தீவிரமான பற்றின் காரணமாக நல்ல இலக்கிய முயற்சிகளை வெளிக்கொண்டு வந்துள்ளதுடன், ஈழத்து இலக்கியங்களை கடல் கடந்து தமிழகத்திலும் பரவச் செய்த பெருமைக்குரியவர்.
1984ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஈழத்து இலக்கியத்தை தமிழகத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்குடன் தனது உயிரையும் பொருட்படுத்தாது இவர் மேற்கொண்ட கடல் பயணம் என் நினைவுக்கு வருகின்றது.
இக்காலப்பகுதியில்தான் தமிழீழ விடுதலைப் போராட்டம் தீவிரமடைய ஆரம்பித்திருந்தது. இந்நிலையில், இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இயக்க வேறுபாடுகள் அற்று பல போராளிகளுக்கும், அவர்களின் தலைவர்களுக்கும் இலக்கியம், ஓவியம் மற்றும் சினிமா குறித்த பிரக்ஞையை ஏற்படுத்தியவர்.
ஒரு புத்தகத்தை வாங்குகின்ற போது அதில் பத்துக்கும் மேற்பட்ட பிரதிகளை வாங்கி போராளிகளுக்கும், அதன் தலைவர்களுக்கும் இவர் விநியோகித்து வந்ததை நினைத்துப் பார்க்கின்றேன்.
இக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் பல நூல்களும், சிறு பிரசுரங்களும் வெளியீடுகளாகக் கொண்டு வரப்பட்டன. யாழ் பல்கலைக்கழகத்தின் மறுமலர்ச்சிக் கழகம் இத்தகைய வெளியீடுகளைக் கொண்டு வருவதில் முனைப்புக் காட்டியிருந்த வேளையில், அவர்களுடன் தொடர்பு கொண்டு புத்தக வடிவமைப்பு மற்றும் தரம் குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்குவார்.
அதுமட்டுமன்றி மறுமலர்ச்சிக் கழகத்தின் வெளியீடுகள் தொடர்பில் மொழி பெயர்ப்பு, பிரதியின் எழுத்துப் பிழைகள் பார்ப்பது, பின்னர் அச்சகத்துக்குச் சென்று எழுத்துப் பிழைகள் பார்ப்பது என இவர் பாரிய பங்காற்றி இருந்தார்.
குறிப்பாக மறுமலர்ச்சிக் கழகத்தின் மாதாந்த வெளியீடான தளிர் சஞ்சிகைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.
இவைகளுக்கு அப்பால் இவரின் இலக்கியம் மற்றும் படைப்புலகம் சார்ந்த பங்களிப்பு என்பது அளப்பரியது. ஈழத்தின் மூத்த இலக்கியவாதிகளான டொமினிக் ஜீவா, கைலாசபதி, காவலூர் ஜெகநாதன் போன்றோரின் முனைப்பினால் தமிழ் இலக்கியம் முன்னெடுக்கபட்ட சூழலில், தமிழகத்தில் நமது இலக்கியப் படைப்புக்கள் குறித்து பேச வைத்த பெருமை இவரையே சாரும்.
அதேபோன்று, தமிழகத்தில் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, சுந்தர ராமசாமி, நா.கண்ணன், க்ரியா இராமகிருஸ்னன் போன்றோரின் நட்புகளால் தமிழக இலக்கியப் பதிவுகளையும் ஈழத்துக்கு எடுத்து வந்தார்.
இதனூடாக தமிழகத்தில் வெளிவந்த காலச்சுவடு, கணையாழி, படிகள், எழுத்து, கசடதபற, போன்ற பல சஞ்சகைகளை ஈழத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியதுடன், தமிழகத்தின் பல சிறுகதை மற்றும் நாவல் ஆசிரியர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தார். இதற்காக இவர் யாரிடமிருந்தும் பணம் பெற்றதில்லை.
இவரின் முயற்சியினால் வெளியிடப்பட்ட அலை இதழ்களின் தொகுப்பு, ஓவியர் மார்க்ஸ் அவர்களின் தேடலும் படைப்புலகமும், தரமான கவிதைகளின் தொகுப்பான மரணத்துள் வாழ்வோம், ஈழநாடு ஆசிரியர் சபாரத்தினம் எழுதிய ஆசிரியத் தலையங்கங்களின் தொகுப்பான ஊரடங்கு வாழ்வு போன்ற நூல்கள் ஈழத்து இலக்கிய உலகில் பலராலும் பேசப்பட்டவை.
குறிப்பாக, தேடலும் படைப்புலகமும் எனும் நூலில் வெளிவந்த ஓவியர் மார்க்ஸ் அவர்களின் ஓவியங்களும், மரணத்துள் வாழ்வோம் கவிதைத் தொகுப்பில் வெளிவந்த கவிதைகளும் 1983 - 1985 ஆண்டு காலப்பகுதியின் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் விடுதலைப் போராட்டம் குறித்த பதிவுகளைக் கொண்டிருந்தது.
இவைகளுடன் இவரின் வெளியீட்டு முனைப்புக்கள் நின்றுவிடவில்லை. இவரின் தமிழியல் வெளியீட்டு நிறுவனத்தின் சார்பில் 1988ஆம் ஆண்டு வெளிவந்த சண்முகம் சிவலிங்கத்தின் நீர்வளையங்கள் எனும் கவிதைத் தொகுப்பு, இவரின் துணைவியாரால் எழுதப்பட்ட இலங்கையின் தோட்டப் பள்ளிக்கூடங்களின் கல்வியமைப்பும் பிரச்சினைகளும் எனும் நூலும் அக்காலப்பகுதியில் மிகவும் முக்கியமானது.
அத்துடன், விடுதலை போராட்டக் காலங்களில் இவரால் வெளியிடப்பட்ட கலாநிதி ரகுபதியின் Early Settlements in Jaffna, யேசுராசாவின் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் மற்றும் அறியப்படாதவர் நினைவாக போன்ற நூல்களும் அக்காலப்பகுதியில் அதிகப் பேசப்பட்ட நூல்களாகும்.
இதனைவிட இன்னும் பல நூல்களை அவர் வெளியிட்டுள்ள போதிலும், அவை என் நினைவுக் குறிப்புக்கு உடனடியாக வரவில்லை. அதற்கப்பால் தன்னுடைய வெளியீடுகளுடன் அவர் தனது செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளாமல், ஏனைய பதிப்பகங்களுக்கு ஊடாக வெளிவரும் பதிப்புக்களையும் இவர் ஊக்கப்படுத்தி வந்தார்.
அதுமட்டுமல்லாது பல எழுத்தாளர்களுக்கும், பல வெளியீடுகளுக்கும் இவர் செய்த நிதியுதவி அளப்பரியது. இதனை அவர் எவரிடமும் கூறுவதில்லை. அதற்கப்பால் உதவி கேட்டுச் சென்றவர்களுக்கும் அவர் இல்லை என்று சொல்லியதில்லை.
தற்போது 69 வயதை அடைந்துள்ள இவர் தொடர்ந்தும் ஒரு இளைஞனைப் போல் தீவிர இலக்கியச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார். அரசியல் ஆய்வாளரும், விமர்சகருமான மு.திருநாவுக்கரசுவின் ஒற்றை மைய உலக அரசியலில் போரும், சமாதானமும் என்ற நாலை கடந்த வருடம் தமிழியல் வெளியீடாகக் கொண்டு வந்த இவர், தொடர்ச்சியாக வெளியீடுகளைச் செய்வதற்கு வரிசையாக நூல்களை வைத்திருக்கின்றார்.
இந்த வெளியீடுகளுக்காக இவர் எவரிடமும் நிதிகேட்டுச் சென்றதில்லை. தனது உழைப்பினால் வருகின்ற வருமானத்தை சிறுகச்சிறுக சேகரித்தே இத்தகைய வெளியீட்டு முயற்சிகளைச் செய்து வருகின்றார். அதுமட்டுமல்ல இத்தகைய வெளியீடுகளுக்கு பணம் கொடுத்து வாங்கிப் படிக்கும் பழக்கம் என்னவோ எம்மத்தியில் இல்லை. இதனால் அவருக்கு நூலினை வெளியிடுகின்ற போது ஏற்படுகின்ற செலவுகள் கூட நூல் வெளிவந்த பின்னர் கிடைப்பதில்லை.
ஆயினும் அவர் சலித்துவிடவில்லை. தன்னுடைய இலக்கிய முயற்சிகளை அவர் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றார். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்த பின்னரும் இந்த அவசர வாழ்க்கையில் அவர் மேற்கொண்டு வருகின்ற இலக்கிய முயற்சிகள் அளப்பரியது.
இலக்கியம் மட்டுமல்ல - அரசியல், சினிமா, கர்நாடக இசை, ஓவியம், வரலாறு, சமூகம் சார்ந்து இவர் பல தளங்களில் பணியாற்றி வருகின்றார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 1981களில் இருந்தே மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வந்தவர். இப்போராட்டம் சார்ந்து தான் முரண்பட்ட கருத்துக்களை வெளிப்படையாகவே முன்வைக்கும் பக்குவம் இவரிடம் இருந்தது. இதற்கப்பால் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால் அனைவரையும் அணைத்துச் செல்லும் பக்குவமும் இவரிடம் மேலோங்கி இருந்தது.
நூலகம்.கொம் எனும் பெயரில் நடாத்தப்படுகின்ற ஈழத்து நூல்களுக்கான இணைய நூலகத்துக்கு இவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் பெரியது. ஈழத்தின் அரும்பெரும் நூல்களை இவ்விணையத்தில் பதிவாக்க உதவியதுடன், இவ்விணையம் தடையின்றி தொடர்ந்து நடாத்தப்படுவதற்கு பெரும் நிதியுதவியையும் செய்துள்ளார்.
இலண்டனில் தமிழ் மக்களுக்கு என ஒரு கலாச்சார மையத்தை உருவாக்க வேண்டும் என்பதில் புலம்பெயர்ந்து வந்த நாட்களில் இருந்து கனவு கண்டு வரும் இவர், அதற்காக எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரே வரைபொன்றையும் தயாரித்து வைத்துள்ளார். ஆனால் அதற்காக நிதியுதவி செய்யக் கூடியவர்கள் எவரும் முன்வரவில்லை என்பது தான் கவலைக்குரிய விடயமாகும். இத்தகைய கலாச்சார மையத்தின் அவசியம் குறித்து அண்மையில் கூட என்னோடு கலந்துரையாடியிருந்தார்.
இவரது இப்பணிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது இவரது துணைவியாரைப் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. பத்மநாப ஐயரின் இலக்கிய முயற்சிகளுக்கு அவரது துணைவியார் வழங்கி வந்த ஆதரவு அவர் மேன்மேலும் தீவிரமாக இலக்கியத் துறையில் செயற்பட வைத்தது. ஆனால் என்ன துயரம்! வாழ்க்கைப் பயணத்தின் இடைவழியில் காலன் அவரைப் பிரித்துவிட்டார்.
2004ஆம் ஆண்டில் கனடா இலக்கிய தோட்டமும், ரொரண்ரோ பல்கலைக்கழக தென்னாசிய மையமும் இணைந்து வழங்கிய இயல் விருது இவருக்கு வழங்கிய அதிவுயர் விருதென்று சொன்னால் அது மிகையாகாது.
தனது வாழ்வை அமைதியாகவும் எளிமையாகவும் வாழ்ந்து வருகின்ற இவர் விருதுகளைத் தேடி செயலாற்றுபவர் அல்ல. இந்நிலையில், இவரோடு இணைந்து இவரின் பன்முகப்படுத்தப்பட்ட முயற்சிகளுக்கு தோளோடு தோள் நின்று செயலாற்றுவதே நாம் அவருக்குச் செய்யும் கௌரவமாகும்
பிரதியுபகாரம் எதிர்பாராது எவரோடும் அறிவும் தமிழும் அன்பும் பகிர்பவர் ஐயர். மற்றவர்கள் தம்மை நாடி வரும்வரை ஐயர் காத்திருப்பவர் அல்லர். வளர்த்தற்குரிய பயிர் என்று தம் மனதிற் பதிபவர்களைத் தாமாகவே நாடிச் சென்று, அறிவு நீர் வாய்க்கால் தொடுப்பு ஏற்படுத்தி உதவுபவர் அவர். அவரால் நிறையப் பயன் பெற்றவர்களில் நானும் ஒருவன். அவர் தொடர்பு ஏற்படுத்தித் தந்த நல்லறிஞர் அறிமுகங்களால் இன்னமும் அறிவு, அனுபவ செழுமைப் பலம் பெற்றுக் கொண்டிருப்பவன் நான்.
எனது வாலிபப் பராயத்தில் நல்ல நூல்களையும் சஞ்சிகைகளையும் எனக்கு அறிமுகப் படுத்தி எனக்கு அறிவு விசால வளமூட்டியவர்களில் முக்கியமானவர், பேராசிரியர் கைலாசபதி! இந்தியாவில் இருந்தோ மேற்குலக நாடுகளில் இருந்தோ சமூகவியல் நல்லறிஞர்கள் கொழும்பு வரும் தருணங்களில் கலந்துரையாடல்களுக்காக அவர் அழைக்கும் சிறிய குழுக்களில் எனக்கும் கருணையோடு இடம் தருவார். இன்று அதே பீடத்தில் அமர்ந்து லண்டனில் எனக்கு உதவுபவர் பத்மநாப ஐயர்.
அண்மையில் லண்டன் ரூட்டிங் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் முத்தமிழ் மன்றம் நடத்திய விழா ஒன்றில் பத்மநாப ஐயர் மாண்பேற்றப்பட்டதாக இளந்திரையனின் அணிந்துரை கூறுகின்றது. எத்துணை நல்ல பணி புரிந்திருக்கிறார்கள். மௌனமாக அந்த முத்தமிழ் மன்றத்தினரைப் பாராட்டுகின்றேன். நன்றி கூறுகின்றேன். விழா தொடர்பாக முன்னதாகவே அறிந்திருந்தால் நானும் போயிருப்பேன். மனம் குளிர்ந்திருப்பேன். எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. ஆனாலும் இளந்திரையனின் எழுத்துதவியாலும் பொங்குதமிழின் வெளியீட்டுதவியாலும் விவரம் காணவும் பழைய நினைவுகளை இரைமீட்டவும் முடிந்தது. அவர்களுக்கு நன்றி.
நிறைந்த அன்போடு
ஏ சி தாசீசியஸ்